Bigg Boss Tamil: பிக்பாஸ் பராக்… ஆட்டம் ஆரம்பமாக போகுது…போட்டியாளர்கள் யாருன்னு தெரியுமா ?

கமல் ஹாசன்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். 2018 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.
வழக்கமாக ஜுலை மாதம் துவங்கப்பட்டு, அக்டோபர் மாதம் இறுதிப் போட்டி நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு, ஜனவரியில் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் சீசன் 5, முந்தைய ஆண்டுகளைப் போலவே ஜுலை மாதத்தில் துவங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
வாய்ப்பு தந்த பிக்பாஸ்
ஆனால் இந்த ஆண்டும் கொரோனா பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால் இதுவரை போட்டி துவங்கப்படவில்லை. இது பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமின்றி பல பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்பை தேடி தந்துள்ளதால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்நேகன், ஆரி, ரித்விகா, வனிதா விஜயக்குமார், முகின் ராவ், லாஸ்லியா, கவின் என பலரும் பல சினிமாக்களில் ஒப்பந்தமாகி வருகின்றனர்.

மாற்றப்பட்ட பிக்பாஸ் லோகோ
பிக்பாஸ் சீசன் 5 எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சமயத்தில் சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் லோகோ மாற்றப்பட்டு, வெளியிடப்பட்டது. அத்துடன் பிக்பாஸ் வீட்டின் அமைப்பு, விதிமுறைகள் ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை மறைமுகமாக உணர்த்தவே பிக்பாஸ் லோகோவான கண்ணில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் ப்ரோமோ ரெடியா
பிக்பாஸ் சீசன் 5 பற்றி பலவிதமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில், பிக்பாஸ் சீசன் 5 எப்போது துவங்கப்படுகிறது, யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு பிக்பாஸ் ப்ரோமோ தயாராவது போன்ற ஃபோட்டோக்களும் இணையத்தில் உலா வருகின்றன.

இவர்கள் தான் போட்டியாளர்களா
இதுவரை வெளியான தகவலின் படி, நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா, குக் வித் கோமாளி பிரபலங்களான கனி, சுனிதா, ஷகீலா, ஷகீலாவின் வளர்ப்பு மகள், உள்ளிட்டோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கனி அல்லது சுனிதா இருவரில் யாராவது ஒருவர் தான் போட்டியில் பங்கேற்க போகிறார்களாம்.

இது என்ன புது குழப்பம்
ஆனால் பிக்பாசில் பங்கேற்பது தொடர்பாக தகவல்களை கனி பலமுறை மறுத்து விட்டார். அது பற்றி இதுவரை தன்னிடம் யாரும் பேசவில்லை என தெளிவுபடுத்தி விட்டார்.இதே போல் ஷகீலா ஏற்கனவே கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவர் தமிழிலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றவர், மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்ற விதி உள்ளதாம்.

பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ, ஃபோட்டோ, போட்டியாளர்கள் பட்டியல் என பல விதமான தகவல்கள் இணையத்தை கலக்கி வந்தாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தரப்பிடம் இருந்தோ, விஜய் டிவி தரப்பிடம் இருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.